நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. மேலும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் விளையாடும் போட்டியில் தோல்வி அடைய வேண்டியதும் அவசியமாக உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிஷன் இந்த உலகக் கோப்பையை கம்பீர் வெல்ல முடியாது எனவும், மேலும் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர முடியாது, அவர் பயிற்சியாளராக இருப்பதற்கான குணங்கள் இல்லாமல் இருக்கிறார் என்றும் மிக வெளிப்படையாக பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது “கம்பீர் பழகுவதற்கு மிகவும் கடினமானவர். அவர் வீரர்களுடன் எப்படி இருப்பார் என்று நமக்குத் தெரியாது. மேலும் அவர் தன்னுடைய பயிற்சியாளர் குழுவில் பெரிய ஆட்களை யாரையும் வைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் அவர்களிடம் அவர் உண்மையாக இருப்பார். அதே சமயத்தில் ஒரு பயிற்சியாளராக இருப்பதற்கு தன் தவறுகளை உணர்வதும், தன்னைக் குறித்து சுய பரிசோதனை செய்து கொள்வதும் மிகவும் முக்கியம். ஆனால் அவருக்கு இப்படியான குணங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவரால் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியாது; மேலும் பயிற்சியாளர் பொறுப்பிலும் தொடர முடியாது” என்று கூறி இருக்கிறார்.

