நேற்று அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் 49 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் எடுத்தார். மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் ஆட்டம் இழந்து வெளியேறும் போது தனியாக நின்று அவர் ஆடிய ஆட்டமே இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் இந்திய கேப்டனின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு சூரியகுமார் யாதவ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். அதற்குப் பிறகு கடந்த நியூசிலாந்து தொடர் வரையில் அவரிடமிருந்து சிறந்த இன்னிங்ஸ் எதுவும் வராமல் இருந்தது. அதற்கு ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து நேற்று கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி முக்கிய போட்டியில் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “நேற்று சூரியகுமார் விளையாடியதுதான் அவருடைய தொழில் வாழ்க்கையில் மிகச் சிறந்த இன்னிங்ஸ் என்று நான் கூறுவேன். இதற்காக இவர் முன்பே அடித்த சதங்கள் எல்லாம் சும்மா என்று கிடையாது. ஆனால் அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன் எல்லாம் அவுட் ஆகி செல்லும்போது, இவர் மட்டும் தனியாக நின்று அவுட் ஆகாமல் 84 ரன்கள் எடுத்திருக்கிறார். இது ஒரு திருப்தியான உணர்வை கொடுக்கும். இது பெருமை பட்டுக் கொள்ளும் ஒரு கேப்டன் இன்னிங்ஸ்” என்று பாராட்டி இருக்கிறார்.

