தற்போது இலங்கை அணியின் வீரர் பானுக ராஜபக்சே இந்திய வீரர்கள் பேட்டில் ரப்பர் கலந்திருப்பதால் தான் இவ்வளவு தூரத்திற்கு பந்துகள் செல்கிறது என்றும், இதை மற்ற யாராலும் வாங்க முடியாது என்றும், மேலும் இந்த விஷயம் கிரிக்கெட் வட்டத்தில் எல்லா வீரர்களுக்கும் தெரியும் என்றும் ஒரு பேட்டியில் கூறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இவர் இலங்கை டி20 அணியின் முக்கிய வீரராக ஒரு காலகட்டத்தில் இருந்தார். மேலும் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார். பிறகு இவருக்கு இலங்கை மற்றும் ஐபிஎல் தொடர் என எந்த பக்கத்திலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் இப்படியான ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.
தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என்று பலராலும் கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இவர் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இவர் பேசும் பொழுது “இந்திய பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் வித்தியாசமானது. அதில் ரப்பரும் சேர்ந்து கலக்கப்பட்டிருக்கிறது. இதை கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. இதுதான் அவர்களுடைய அதீத சக்திக்கு காரணம். இந்த வகையான பேட்டை வேறு யாராலும் வெளியில் வாங்க முடியாது. அவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இந்த விஷயம் எல்லா வீரர்களுக்கும் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

