இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில், தேர்வுக்குழு சிவம் துபேவை மாற்று வீரராக அணியில் இணைத்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியுடன் இருக்கும் துபே, அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்காக களமிறங்கவுள்ளார்.
நிதிஷ் குமார் ரெட்டி இடது தொடைத்தசை (Quadriceps) காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், முழு உடற்தகுதியை எட்டாததால் பிசிசிஐ மருத்துவக் குழு மற்றும் தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் பங்களிக்கும் திறன் கொண்ட சிவம் துபே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய ஒருநாள் அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்குவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

