ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் அண்மையில், கிரிக்கெட்டின் சிறந்த வீரரைத் தேர்வு செய்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரோ அல்ல ஆஸ்திரேலிய நாட்டின் லெஜன்ட் டான் பிராட்மேனோ அல்ல நடப்பு கிரிக்கெட் கிங் விராட் கோலியையோ அவர் கருதாமல் வேறொரு வீரரைத் தேர்வு செய்துள்ளார்.
குறிப்பாக பேட்ஸ்மேன், பவுலர் என்றில்லாமல் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டின் அனைத்து வடிவத்திலும், அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படும் வீரரே தலைசிறந்த வீரர் ஆவார் என ரிக்கி பாண்டிங் கருதுகிறார். அவர் குறிப்பிடும் வீரர் தென்னாபிரிக்கா ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ்.
அவர் கூறியதாவது, ” தனியாக பேட்ஸ்மேன் அல்ல பவுலர் பற்றி நான் கூறவில்லை, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர், கோட் என்றால் அது ஜாக் காலிஸ் தான். கிரிக்கெட்டில் நான் பார்த்த சிறந்த ஆல்ரவுண்டர் அவர். பேட்டிங்கில், டெஸ்ட்டில் 45 சதங்கள் மற்றும் ஓடிஐயில் 17 சதங்கள். பின்னர் பவுலிங்கில் 292 டெஸ்ட் விக்கெட்டுகள், 273 ஓடிஐ சி விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். “
” இது தவிர ஃபீல்டிங்கிலும் தன் சிறப்பைக் கொடுத்துள்ளார். பொதுவாக சிறந்த கிரிக்கெட்டர் பற்றி பேச்சுக்களில் இவரை யாரும் பெரிதாக கருதுவதில்லை, ஆனால் என்னைக் கேட்டால் நான் காலிசைத் தான் சொல்வேன். ” என ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்து தள்ளினார்.
ஜாக் காலிஸ் டெஸ்ட், ஓடிஐ, டி20ஐ என அனைத்து பார்மட்டிலும் அருமையாக விளையாடி 28 ஆயிரத்துக்கு மேல் ரன்கள் சேர்த்துள்ளார். இது தவிர ஐ.பி.எல் தொடரிலும் 2500+ ரன்கள் அடித்து ஒரு முறை கோப்பையையும் வென்றுள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கு கடவுளாக இவர் தான் விளங்குவார்.
மேலும் அவரிடம், இயற்கையாகவே திறமையான பேட்டிங் திறன் கொண்டவர் யார் என நினைக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரிக்கி பாண்டிங், ” அது பிரைன் லாரா தான் ” எனக் கூறினார்.

