இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் முகமது ஷமிக்கு, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2025 மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடிய பிறகு, இந்திய அணிக்காக அவர் களமிறங்கவில்லை. இதனால், ஷமியின் உடற்தகுதி மற்றும் மீண்டும் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
இதற்கிடையே, பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் ஷமி, தனது உடற்தகுதி குறித்து விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்துள்ளார். “நான் இன்னும் எனது உச்சகட்ட உடற்தகுதியில்தான் இருக்கிறேன். இதில் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பவே பந்துவீச்சு முடிவு செய்யப்படுகிறது என்றும், வெளியில் இருப்பவர்கள் இதை வைத்து தனது உடற்தகுதியை மதிப்பிட முடியாது என்றும் விளக்கியுள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் விளையாடும் நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்விக்கும் ஷமி தனது பதிலைத் தெளிவாகக் கூறியுள்ளார். “எந்தத் தொழிலிலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. எப்போதும் ஒரு இலக்கு இருக்க வேண்டும்” என்று தெரிவித்த அவர், இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற இலக்கு இன்னும் இருப்பதையும் மறுக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து விளையாடி தனது திறமையை மேம்படுத்துவதில்தான் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

